கருப்பை காக்கும் பொக்கிஷம் ‘பூங்கார் அரிசி’

எல்லா காலச்சூழ்நிலையிலும் வறண்ட நிலத்தில் விளையக்கூடிய நெல்லாக இருக்கும் பூங்கார் அரிசி பல வளமான சத்துக்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது.

மார்ச் 10, 2022 - 13:55
ஆகஸ்ட் 6, 2023 - 19:44
 0  113
கருப்பை காக்கும் பொக்கிஷம் ‘பூங்கார் அரிசி’

பூவையும் பெண்ணையும் எப்படி பிரிக்கமுடியாதோ, அப்படித்தான் பூங்கார் அரிசியையும் பெண்களையும் தனித்து பார்க்கமுடியாது. அந்தளவிற்கு பெண்களுக்காகவே இயற்கை தந்த அற்புத கொடைதான் பூங்கார் அரிசி. 1952ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல பாரம்பரிய நெல்கள் அழிந்தன. அந்த வெள்ளப்பெருக்கில காப்பாற்றப்பட்ட ஒருசில பாரம்பரிய நெல்களில் பூங்கார் அரிசியும் ஒன்று. அப்படி காப்பாற்றப்பட்ட அரிய நெல்ரகமான பூங்கார்தான் பெண்களின் கருப்பை காக்கும் வரம்.

உணவே மருந்தென வாழ்ந்த நாம் சிறிதுகாலம் துரித உணவுகளின் பின்சென்று நம் நலத்தை தொலைத்து மருந்தே உணவென மாறிப்போயிருந்தோம். தற்போதுதான், மீண்டும் நம் பாரம்பரிய உணவுகள் தலைத்தூக்கி வருகின்றன. அந்த நல்வழியில்தான் பூங்காரின் அருமையும் நம் நவீன பெண்களின் கவனத்துக்கு வருகின்றது.

இன்றைய சூழலில் கருத்தரிப்பு மையங்கள் பெருகிவிட்டன. ஆனால், அந்த காலத்தில் பெண்கள் பூப்பெய்த காலத்திலிருந்து பிரசவித்த காலம் வரை உடல் உறுதியுடன் இருக்க, தினமும் உணவில் பூங்கார் அரிசியை உண்டு வந்தார்கள். அந்தளவிற்கு பெண் நலனை காக்கும் பொக்கிஷமாக இந்த அரிசி பயன்பட்டு வந்துள்ளது. எல்லா காலச்சூழ்நிலையிலும் வறண்ட நிலத்தில் விளையக்கூடிய நெல்லாக இருக்கும் பூங்கார் அரிசி பல வளமான சத்துக்களை பெண்களுக்கு வழங்கி வருகிறது.

பூங்கார் அரிசியின் எண்ணற்ற பயன்கள்:

நார்ச்சத்து, தயாமின், கார்போஹைட்ரேட், ஆன்ட்டி ஆக்சிடெண்ட், விட்டமின்கள் என பல எண்ணற்ற சத்துக்கள் இந்த அரிசியில் அடங்கியுள்ளன. பெண்களின் ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு, அவர்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களை சரிசெய்கிறது. கர்ப்பக்காலங்களில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் இந்த ஒரே அரிசி தருகிறது. உடலை வலுப்படுத்தி, கருப்பையை பலமாக்குவதோடு சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கிறது. அதோடு மட்டுமின்றி, சர்க்கரை அளவையும் சீராக வைக்கிறது. பிரசவித்த காலத்தில் ஆறுமாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு, குழந்தைக்கும் இதன் சத்துக்கள் கிடைக்கும்.

பூங்கார் அரிசியை சாதமாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிடலாம். இந்த அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவையும் செய்து உண்ணலாம். பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இந்த அரிசியை உண்ணலாம். வளரும் தளிர்கள் சிறுவயதிலேயே இதை உண்ணும்போது அதிக பலத்தோடு இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்குழந்தைகளின் இடுப்பு எலும்பு சிறுவயதிலேயே உறுதியாவதற்கு பூங்கார் அரிசியின் சத்துக்கள் பெரிதும் துணைபுரிகின்றன.

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow