நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல.. நல்ல தொண்டர்களே..!

நாட்டில் இன்று தலைவர்களுக்கு பஞ்சமில்லை. தலைவனாக வரையறையும் தேவையில்லை. தலைவனை உருவாக்கும் நல்ல தொண்டர்களே இன்றைய இன்றியமையாத தேவை.

ஆகஸ்ட் 9, 2023 - 17:57
ஆகஸ்ட் 9, 2023 - 18:48
 1  37
நாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல.. நல்ல தொண்டர்களே..!
தேர்தல் வாக்குரிமை
சரியான ஒரு தலைவன் தொண்டர்களை உருவாக்குவதும், தொண்டர்களுக்கான பாதை, கொள்கை வகுத்து வழிகாட்டி அவர்களின் வாழ்வை வளமாக்குவதும் இயற்கையாய் இருந்தது. ஆனால் இயற்கையின் எல்லா இயல்பையும் நம் சுயநலத்துக்காக மாற்றியது போல தலைவனின் இயல்பை இல்லையில்லை வரையறையையும் சேர்த்தே மாற்றிவிட்டோம்.
 
பொறுமை என்ற பெயரில் சமரசம், பின் சகிப்புத்தன்மை என்ற பெயரில் இன்னும் சமரசம், இன்று கடமை, பொறுப்பு, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு என எல்லாவற்றிலுமே சமரசம். பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம் இருக்கவேண்டும், ஆனால் எதில் என்பது மிகவும் முக்கியமல்லவா? அதன் அளவும் முக்கியமல்லவா? இறுதியாய் சமரசம் குறைத்து முடிந்தவரை சரியாய் இருப்பதை கேவலமாகவும் எல்லாவற்றிலும் சமரசம் செய்து ஒரு செயலின் உயர்ந்த  நோக்கத்தை சிதைத்து, அதன் அடிப்படையையே தலைகீழாக்குவது சரியாகவும் மாறிவிட்டது. 
 
ஒரு தலைமையை, வழிகாட்டியை, நம் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் சமரசம் என்பதுதான் இன்றைய  யாரை வேண்டுமானாலும் தலைவராக்கும் நம் கேவலமான மனநிலைக்கு காரணம். சற்றே சிந்திப்போமா? நம் வாழ்க்கைமுறை கொஞ்ச கொஞ்சமாய் மாறியது நம் மனமும் சிந்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மாறியதால் என நாம் உணரவில்லை. எந்த ஒரு நல்ல நீண்ட கால பயன்தரும் விசயமும் நம்மை பெரிதாய் கவர்ந்ததில்லை. ஆனால் உடனுக்குடன் பலன் தருவது தீயதாய் இருந்தாலும் கவர்கிறது. உளவியல் படித்தோருக்கு எளிதாய் புரியும். நம் மனதின் ஒவ்வொரு மாற்றமும் ஒரு நாளில் ஏற்பட்டதல்ல என்பதும் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதும். ஆனால் இன்று இது எல்லாருக்கும் புரிய வேண்டியது அவசியமாகிவிட்டது. 

அனைவரும் புரிந்து இன்றிலிருந்தாவது முயற்சித்தால் மட்டுமே இன்னும் சில தலைமுறைகளில் ஒரு நல்ல வாழத் தகுதியான உலகை நம் சந்ததிகளுக்கு விட்டுசெல்வோம். இல்லையேல் இன்னும் குழப்பமான, குதர்க்கமான வாழத் தகுதியில்லாத ஒரு உலகில் நம் சந்ததிகளை குத்தும் குற்ற உணர்ச்சியுடன் விட்டு செல்வோம். அவர்கள் நம்மை வழிபட மாட்டார்கள் மாறாக வசைபாடுவார்கள். அடி முதல் நுனி வரை புரையோடிப் போய் இருக்கிறது பணத்தாசை, சுயநலம். பெயர், புகழ், மரியாதைக்காக எதிலும் முன் நின்று செய்பவன் இன்று மதிக்கப்படுவதில்லை. 
 
ஏதோ ஒரு உள் நோக்கத்துடன் வஞ்சகமாய் பேசி எப்படியாவது காரியம் சாதிக்க நினைப்பவன் என்று தெரிந்தும் ஏனோ அவனை மதித்து பெரியவனாக்கி தலைவனாக்கும் போதே தவிடுபொடியாகிறது தலைவனுக்கான தர்மம். தலைவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போய் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைவன் என்றாகிவிட்டது. இயன்றவரை இயல்பாய் இருக்கும், முடிந்தவரை தம் கடமையை முழுமையாய், சரியாய் செய்யும் ஒருவரையே நாம் மதித்து, நமக்கான பிரதிநிதியாய் ஆக்கிட வேண்டும்.
 
எதிலும் குறைந்தபட்சம் தம் கடமையை செய்யும் ஒரு சிலரேனும் இருப்பதால்தான் இன்னும் இந்த சமூகம் சுமூகமாய் வாழ்கிறது என்பதுதான் உறுதியான உண்மை. சமூகம் மட்டுமல்ல நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் ஏன் நமக்குள் உள்ள பல முகங்களில் ஒரு முகத்திலாவது இயன்ற வரை கடமை செய்யும் அந்த இயல்பான மனிதம் துளியளவாவது துளிர்க்கிறது. நம்மில் பலருக்கும் இது தெரியும்.  இருப்பினும் எந்த சூழலிலும் நாம் அவர்களை முன்னிலைபடுத்துவதில்லை. உதாசினப்படுத்துவதுமில்லை. கண்டிப்பும், கட்டுப்பாடும் கொண்டிருந்தால் நமக்கு கசப்பாய் தெரிவது வேதனை. அவர்களை நமக்கு கிடைத்த இளிச்சவாயனாக நம்மையும் அறியாமலே உபயோகிக்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லோருமே பழகிவிட்டோம் என்பது தான் பரிதாபம்.

நாமே நேரிடையாக சுயநலவாதிகளால் பாதிக்கப்படும்போது, இந்த சமூகம் நம் வாழ்வின் அர்த்தத்தை அடையவிடாமல் அலைகழிக்கும்போது நம் ஒவ்வொருவருக்கும் சமூக மாற்றம் அவசியமாய் தோன்றுகிறது. அந்த மாற்றம் நம் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு செயலிலும் இயல்பாக வேண்டும். நாம் எதிர்க்கும் மாற்றங்கள் ஒரு நாளில் ஏற்பட்டவையல்ல, ஒரு தலைமுறையிலும் ஏற்பட்டதல்ல, நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களும் ஓர் நாளிலோ ஓர் தலைமுறையிலோ ஏற்படுவது சாத்தியமல்ல. ஆனால் இன்றிலிருந்து நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை மேலும் தாமதமாக்கலாம் அல்லது தவிடுபொடியாக்கி நம் தலையெழுத்தே மாறி நம் சந்ததிகள் எல்லாம் மனிதம் மறந்து, மாண்பு மறந்து, நம் முன்னோரின் நாகரிகம் மறந்து மீண்டும் மந்தைகளாகலாம்.  
 
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும், நடைமுறைபடுத்தும் மனப்பக்குவம் இல்லாததாலும் அல்லது எடுத்துச்சொல்ல இயலாததாலும் , சொன்னாலும் மதிக்கவோ, ஏற்கவோ செய்யாமல் ஏளனம் செய்வதாலும் மரத்துப்போய் மக்களில் மாக்கள் அதிகரித்து வருகிறார்கள். மக்களில் எப்போதுமே மாக்கள் அதிகமாய் இருப்பதால்தான் தம் கடமையை இயல்பாய், முழுமையாய், பொதுநலத்தோடு செய்து தனியாய்த் தெரியும் தன்னலமற்ற தலைவர்களை மதித்து முன்னிலைப்படுத்தி அவர்கள் வழியில் வாழ்வது மக்களின் இன்றியமையாத இயல்பாய் இருந்து வருகிறது. இன்று இந்த இயல்பே மாறிக்கொண்டிருப்பது தான் மனிதனின் மிகப்பெரும் பிரச்சினை.
 
தலைவனை, வழிகாட்டியை சரியாக தேர்ந்தெடுப்பது தான் நம் வாழ்வை வளமாக்கும், நம்மை நாகரிகமாய், நல்லவொரு வாழ்வை வாழ வைக்கும் என்பதை மறந்ததால்தான் இன்றைய சமூகம் இப்படியொரு கட்டுரையை எழுத வைத்துள்ளது. இன்றைய அரசியலில் தவறான தலைவர்களை அதிகமாக்கி தலைவர்களுக்கான அடிப்படை தகுதிகளையே மறந்துவிட்டோமோ என்று சிந்தித்த போதுதான் இன்றைய தேவை தலைவர்கள் அல்ல நல்ல தொண்டர்கள் என்பது உறைத்தது. மக்களின் இயல்பு மாற தலைவர்களும், தலைவர்களின் இயல்பு மாற மக்களும் காரணம். மக்கள் தவறு செய்யும்போது தண்டித்து திருத்தி நல்வழிப்படுத்தும் தலைவர்களும், தலைவர்கள் வழிகாட்டிகள் தவறெனத் தெரிந்தால் தூற்றி, துரத்தி விட்டு நல்ல தலைவர்களை, வழிகாட்டிகளை தேர்ந்தெடுத்து பின் செல்லும் மக்களும்தான் நாகரீகமான நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கமுடியும்.

தனி மனிதனின் நல்ல முகம், ஒரு குடும்பத்தின் நல்ல தலைமை, ஒரு தெருவின் நல்ல தலைமை, ஒரு ஊரின் நல்ல தலைமை, ஒரு சமூகத்தின் நல்ல தலைமை,  ஒரு தொகுதியின் நல்ல தலைமை, ஒரு மாவட்டத்தின் நல்ல தலைமை, ஒரு மாநிலத்தின் நல்ல தலைமை, நம் நாட்டின் நல்ல தலைமை என எல்லாவற்றிலுமே ஒரு நல்ல தலைவர், வழிகாட்டி அமையும் போதுதான் எதிர்பார்க்கும் எல்லா நல்ல மாற்றங்களும் வரும் வாழ்வும் இனிக்கும், இயல்பாய் இருக்கும், மனிதம் தழைக்கும். ஏதோ அற்ப காரணங்களுக்காக அற்பமான மாக்களை தலைவர்களாய், வழிகாட்டும் இடத்தில் ஏற்றுக்கொண்டால் எல்லாமே ஏடாகூடமாக தான் நடக்கும். 
 
நாம்  நம் பிரதிநிதிகளை, வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்கும் முறை நாகரீகமானதா? சரியானதா? ஓர் சிங்கக்கூட்டமோ, யானைக்கூட்டமோ அல்லது கூடி வாழும் எந்த ஒரு உயிரினமோ ஒரு சுயநலமான, தகுதியில்லாத ஓர் தலைமையை தேர்ந்தெடுக்குமா? அப்படி தேர்ந்தெடுத்தால் என்னவாகும்? படிப்படியாய் அந்தக் கூட்டமே அழிந்துவிடும். என்ன மனிதனில் அது கொஞ்சம் மெதுவாய் நடக்கிறது அவ்வளவுதான். ஒரு தேர்தல் எனில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்? ஏன்? எதற்காக போட்டியிடுகிறார்கள்? ஒரு காலத்தில் பொதுநலத்தோடு, பெயருக்காக, புகழுக்காக பெரும்பாலும் போட்டியிட்டார்கள். யாராவது சிலர் சுயநலத்தோடு ஆதாயத்துக்காக போட்டியிட்டாலும் அதை வெளிகாட்டாமல் மறைத்தால்தான்  ஆதரவும், மரியாதையும் கிடைக்கும் நல்ல சமூகமாய் நம் மூத்தோர் சமூகம் இருந்தது. 
 
இன்று ஒரு வார்டு உறுப்பினர் தேர்தலில் நிற்போரின் முதன்மையான நோக்கம் வெளிப்படையாய் நமக்கு தெரியும். பொதுநலத்தோடு, பெயர், புகழுக்காக போட்டியிடுபவர் நமக்கு கோமாளியாய் தெரிகிறார். நல்லவரானாலும் நாம் மதிப்பதில்லை, ஆனால்  உறவு, நட்பு, பலன், சாதி, மதம் முக்கியமாய் பணம் என ஏதோ ஒரு காரணத்தால் அயோக்கியனாய் இருந்தாலும் நம் பிரதிநிதியாய் ஆக்குகிறோம். அவன் பின்னே நிற்கும் நம்மையும் தரம் தாழ்த்தி கிடைக்கும் அற்ப பலனில் பெருமை கொள்கிறோம், மரத்தின் மேலமர்ந்து அடித்தளத்தை சிதைக்கும் மந்தைகளாகிறோம். இங்கிருந்து தொடங்குகிறது நம் சமூகத்தின் சறுக்கல் என்பதை தயவு செய்து ஒத்து கொள்ளுங்கள்.
இனியும் இதுவே தொடர்ந்தால் என்னவாகும் நம் சமூகத்தின், நம் சந்ததியின் நிலை என சிந்தியுங்கள் வழக்கம்போலவே சிந்தனையோடு நிறுத்தாமல் சிறு துரும்பையாவது கிள்ளிப்போடுங்கள். சுயநலம் என்றுமே நீடித்த நல்வாழ்வு தந்ததில்லை, எல்லோரும் சுயநலமாய் மாறிவிட்டால் வாழ்வு யாருக்கும் சாத்தியமில்லை. பொதுநலத்தோடு முடிந்தவரை கடமையை சரியாய் செய்ய நினைக்கும் நல்ல மனிதர்களை முன்னிறுத்துங்கள், வழிகாட்டி ஆக்குங்கள் குறைந்தது அவர்களை கோமாளியாக்கி, கூனிக்குறுகி ஒதுங்கி போகச் செய்துவிடாதீர்கள். நம் ஒவ்வொரு நாளும் குறைந்தது இயல்பாய் கழிய அவர்கள் ஒரு சிலரேனும் வேண்டுமல்லவா?
 
- சுந்தரமுருகன்

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow