குழந்தைகளிடம் சாதிய மனநிலை.. பெற்றோர்களே கவனம் அவசியம்..! 

நாங்குநேரி சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாதிய மனநிலையோடு குழந்தைகள் வளர்வதையே, இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

ஆகஸ்ட் 15, 2023 - 19:45
ஆகஸ்ட் 15, 2023 - 20:03
 0  41
குழந்தைகளிடம் சாதிய மனநிலை.. பெற்றோர்களே கவனம் அவசியம்..! 
கல்வி கூடங்களில் கற்றுத்தரப்படும் கல்வியே ஒருவனை மேன்மையடைய செய்யும். அப்படி மேன்மை அடைந்தவர்கள் ஏராளம். இன்றைய சூழ்நிலை கல்வி கூடங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் இந்த இரண்டும் பல்வேறு நிலைகளில் இணைந்து பயணிப்பது சாதகமற்ற சூழ்நிலையில்தான் உள்ளது. 
 
தனியார் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களை தாங்கள் கூறுவதை மட்டும் நீங்கள் கேளுங்கள் என பெற்றோர்களை தங்கள் வசம் வைத்துக்கொண்டு பள்ளிகளை இயக்கிக் கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிலை வேறு. அரசாங்கத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒரு சில விதிமுறைகளை கட்டுப்பட்டுதான் இயங்கிக் கொண்டு வருகின்றனர். எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு சில பிரச்சினை பள்ளிகளில் வருவதுண்டு. பாலியல் தொந்தரவு ஒருபுறம், ஒருசில நேரங்களில் தவறான ஆசிரியர்களில் மனநிலையால் உருவாகும். மறுபுறம் சாதிய மோதல்கள் என்று மாணவர்களை ஒழுங்குப்படுத்துவது வேதனையான சூழ்நிலையை உருவாக்குகின்றது. 

இன்னும் சில இடங்களில் போதைப்பொருள்கள் மற்றும் மது பழக்கவழக்கம் என பல்வேறு காலசூழ்நிலை ஏற்படுத்தும் பழக்க வழக்கங்கள். இவைகளில் மாணவர் சமுதாயம் சண்டைகள், கொலை, கொள்ளை, என வழிமாறும் ஒரு சில மாணவர்களின் மனநிலை. இவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறும்  காவல்துறை மற்றும் அரசாங்கம். பல்வேறு சட்டத்திட்டங்கள் அமைத்து பாதுகாத்து வந்தாலும் இந்த இளம் தலைமுறை மாணவர்கள் நவீன சமூகவலைதளங்களில் வரும் செய்திகள், குற்ற சம்பவங்கள், திரைப்படங்கள், சொந்த சாதிகளின் பெயரால் ஏற்படுத்தப்படும் வாட்ஸ்அப் குழுக்களும், ஏதோ ஒன்று மாணவர்களின் மனநிலையை மாற்றி விடுகின்றன. 
 
இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களால் ஏற்படும் குடும்ப சண்டைகள், தவறான குடும்ப வாழ்க்கை இவைகளும் மாணவர்களின் மனநிலை மாற்றத்தினை ஏர்படுத்தி விடுகின்றன. இந்த காலக்கட்டத்தில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் பலன் இல்லாமல் போகின்றது. இளம்கன்று பயமறியாது என கூறுவது போல் வாகனங்களை வேகமாக இயக்குவது. அதனால் விபத்துகளை ஏற்படுத்துவது, இதுபோன்ற குற்றச் சம்பவங்களும் நகரங்களில் ஏற்படுகின்றது. இதில், தனக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தங்களை பயமடைய செய்வதில்லை. இதில் பல்வேறு காரணிகளை மதுபோதை, போதை பழக்கவழக்கங்கள், தவறான நண்பர்களின் சேர்க்கை எல்லாமே மாணவர்களின் மனநிலையை மாற்றி விடுகின்றன. இதன் போக்கு நாளுக்கு நாள் நீண்டு கொண்ட செல்வது கவலை அளிக்கிறது. 
 
இவைகளுக்கு தகுந்த மருந்து எது என்று பார்த்தால், ஒரு குழந்தை வளரும்போது அவர்கள், பெற்றோர்களின் கைபிடியில் இருக்க வேண்டும். பெற்றோர்களும் நல்ல மனநிலையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் தன் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத் தரவேண்டும். எந்த சூழ்நிலையிலும் சாதிய ரீதியான எண்ணங்களை தங்களின் குழந்தைகளின் மனதில் வளர்க்கவே கூடாது. எல்லா படிநிலைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை தவறான மனவோட்டத்திர்கு அனுப்பி விடக்கூடாது. இந்த சமூகம் எல்லா சூழ்நிலைகளில் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதில்லை. 

சில நேரங்களில் தவறானவற்றை உருவாக்க நினைக்கும் இளம் மனதில் அதன் மீது ஆசையும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளை பெற்றோர்கள் இரும்புகரம் கொண்டு தடுத்திட வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் உங்கள் கையைவிட்டு சென்று விடக்கூடாது. நிச்சயமாக தங்களின் உள்ளங்கையில் தான் இருக்க வேண்டும். ஒருபோதும் திசைமாற அனுமதிக்க கூடாது. பின் ஆசிரியர்கள் உங்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். இதனை செய்ய எந்த பெற்றோர்களும் தயங்கவே கூடாது. தன் குழந்தைகள் சுயமாக சிந்திக்கக்கூடிய மனநிலை வரும்போது, அவர்களுடையை சிந்தனைகளை அளவீடு செய்து பின் அவர்களை சமூகத்தில் இயங்க விட வேண்டும். 
 
இந்த செயல்பாடுகள் பெற்றோர்களால் மட்டுமே நடக்கும். எந்த சூழ்நிலையிலும் தங்களின் குழந்தைகளின் மனநிலையில் சாதிய வன்மத்தையும், குற்றங்கள் செய்யும் மனநிலையையும் வளர்த்து விடக்கூடாது என்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல குழந்தைகளை இந்த சமூகத்திற்கு நீங்கள் அளிக்க முடியும். இவை ஒரு சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும்.
கட்டுரை -  வீ.மோ

உங்கள் எதிர்வினை என்ன?

like

dislike

love

funny

angry

sad

wow